இது மூத்த தலைமுறைக்காக…

இது மூத்த தலைமுறைக்காக…

கணினி என்றாலே நவீனம் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. நவீனம் என்றால் அதில் இளமைதான் கருப்பொருளாக இருக்கிறது.எனவே நவீனத்திற்கும் முதுமைக்கும் இடையே ஏதோ ஒரு வேறுபாடோ அல்லது ஒரு இடைவெளியோ, ஏதோ ஒன்று இருக்கிறது.அது எதனால் ஏற்படுகிறது?

இன்றைக்கு வளர்ந்துவரும் கணினித் தொழில் நுட்பம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பரிணமித்து வருகிறது.கையடக்க திறன்பேசிகளின் அறிமுகங்களால் நாம் இருக்கும் இடத்திலிருந்தே நம்மால் முடிந்தவரையில் அனைத்தையும் தொட்டுவிட சாத்தியக்கூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் கணினி, திறன்பேசி போன்றவற்றில் இணையத்தை முடுக்கி இப்பொழுது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், அடுத்து எதை செய்யப்போகின்றோம் என்பவற்றறை ஒரு நொடிப்பொழுதில் பதியச் செய்துவிடுகிறோம். ஆனால் இவை ஒன்றும் அவ்வளவு முதன்மையான பயன்பாடு அல்ல. ஆகவே இவற்றையே நாம் எளிதாகச் செய்யும்போது நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றையும் இந்த கணினி இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இன்னும் எளிதாகச் செய்ய முடிகிறது.
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதல், தாய் மொழியில் படைப்புகளை உருவாக்குதல் , பொருட்களைப் அ றிந்து கொள்ளுதல் , வீட்டிலிருந்தபடியே பொருட்களை விற்றல், வாங்குதல், இரயில் டிக்கெட் பதிவு செய்தல் என பணம் சம்பாதிக்க ஏதுவான ஒரு தொழிலையும், கற்றலையும், பொழுது போக்கு தொடர்பான தேவைகளையும் நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.

இரயில் முன்பதிவு அலுவல்களில் முன்பு காணக்கிடைத்த காட்சிகள் இப்போது கிடைப்பதில்லை. இரவிலிருந்தே நீண்ட நெடிய வரிசையில் காத்திருப்பது, பயணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அடித்துப் பிடித்துக் கொண்டு தற்போது யாரும் நிற்பதில்லை.

ஆண்ட்ராய்ட் திறன்பேசிகளின் வருகையினால் நமது திறன் பேசியிலிருந்தே நம்மால் இரயில் இருக்கைகளை முன்பதிவு செய்ய முடிகிறது. இது நம்மிடையேயுள்ள கணினித் தொழில் நுட்ப வளர்ச்சியையும் , அதில் நாம் வளர்த்துக் கொண்ட அறிவையும் நோக்கி ஆட்காட்டிவிரலை நீட்டிக்காட்டச் சொல்கிறது. இருப்பினும் அது போன்ற இரயில் முன்பதிவு மையங்களில் ஒரு வரிசை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இருக்கும் தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் ஏன் இன்னமும் வரிசையில் காத்திருக்கின்றனர் என்று ஆராயப்போனால் அது ஒரு தலைமுறையை புரட்டிப்பார்க்க நேர்கிறது.
ஆம் நமது சமூகத்தில் ஒரு பிரிவினர் இன்னும் இந்த கணினி, இணையத்தில் என்னென்ன விருக்கின்றன என்பதே தரியாமல் இருக்கின்றனர். ஆனால் அந்த கணினி , இணையத் தொழில் நுட்பங்கள் அவர்களின் வாயிலாகத் தான் நமக்கு கிடைத்தன.

இருப்பினும் தற்போது அவர்களுக்கு நம் அளவுக்கு அதில் திறனில்லை.யார் அவர்கள்?
இன்றைய இளைய தலைமுறையினரை உருவாக்கியவர்கள், நமக்கு கணினிகளை வாங்கிக் கொடுத்த நமது மூத்த தலைமுறையினர்தான் அவர்கள். உண்மையென்று ஒப்புக்கொள்ள நாம் நமது குடும்பத்தினரில் எத்தனை பேருக்கு கணினி, இணையம் சார்ந்தவற்றில் புரிதல் இருக்கிறது என சிந்தித்தால் போதும். பெற்றோர்களுக்கு இன்றைய இளையதலைமுறையினர் ஃபேஸ்புக்கைப் பற்றி புரிய வைத்து, அதில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொடுத்தாலும் அவர்கள் அடிக்கடி பயன்படுத்தாத காரணத்தால் அதில் உள்நுழைவதற்கான பயனர் பெயரையே மறந்து விடுகின்றனர்.
இதில் சிந்திக்க வேண்டியது, நமக்கு கணினிகளை வாங்கிக் கொடுத்தவர்களுக்கு நாம் ஏன் இப்போது கற்றுக் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். ஏன் அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. ஏன் கணினி இணையம் சார்ந்து நம்மவர்கள் முன்கூட்டியே தொழில்களையும் , படைப்புகளையும் தொடங்கவில்லை..?
இந்த கணினித் தொழில் நுட்பம் தான் நாளைய உலகை ஆளப் போகின்றது என்ற கூற்றில் நம்பிக்கையில்லாதவர்களாக அவர்கள் இருந்து விட்டனரா?
அல்லது அந்த தொழில் நுட்பம் அவர்களிடையே ஏதேனும் பாகுபாடு பார்த்துவிட்டதா?
எப்படியிருப்பினும் இப்போது அந்த தலைமுறையினர் இதைப்பற்றி கற்க விழைந்து கொண்டிருக்கின்றனர். இணையத்தில் தேடவும், பகிரவும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கினறனர். இணையத்தில் உள்ள அனைத்தையும் வியப்புடன் பார்க்கின்றனர். நாம் சொன்னால் தான் கணினி இணையத்தில் என்னென்ன இருக்கின்றன என்பதே அவர்களுக்கு புரிகிறது. இணையத்தில் தொழில் தொடங்குவதற்கும், கற்றறிவதற்கும் மூத்த தலைமுறை இப்போது இளைய தலைமுறையையே நாடிஇருக்கிறது. தாழ்மொழியில் மூத்த கருத்துக்களும், சிந்தனைகளும் இந்த இணைய உலகில் இணைய நாம் தான் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *