வாங்க குழந்தைகளா…தமிழ் படிக்கலாம் – Dinamalar

வாங்க குழந்தைகளா…தமிழ் படிக்கலாம் – Dinamalar

காயத்ரி சீனிவாஸ்,சென்னையை சேர்ந்தவர்.

இவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் வாழ்பவர்கள்,நீண்ட விடுமுறைக்கு சென்னை வந்தவர்கள் காயத்ரி முன்வைத்த பிரச்னை ஒன்றே ஒன்றுதான்.அது அவர்களது பிள்ளைகள் தமிழ் பேச சிரமப்படுகிறார்கள் ,வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் என்றாலும் அவர்களது குழந்தைகள் அதிகம் இருப்பது பள்ளிகளில் என்பதால் வீட்டில் தமிழில் பேசினாலும் பிள்ளைகள் ஆங்கிலத்தில்தான் பதில் தருகிறார்களாம். ஆரம்பத்தில் அது பெருமையாக இருந்தாலும் தமிழர்களாகிய நம் பிள்ளைகள் தமிழ் தெரியாமல் தமிழ் பேசாமல் வளர்கிறார்களே என்ற வலியை இப்போது உணர்கிறோம்.

ஊருக்கு வந்த இடத்தில் தாத்தா பாட்டியிடம் கூட பாசமாய் பேசமுடியாமல் மொழி தடுக்கிறது, ஆட்டோவை கூப்பிட வீட்டு வேலையாட்களிடம் பேசக்கூட முடியாமல் தடுமாறுகிறார்கள் சின்ன சின்ன வார்த்தைகளாய் தமிழ் சொல்லித்தர யாராவது இருக்கிறார்களா? என்று கவலையான குரல்களுக்கு பதில் தேடினார் காயத்ரி.

முடிவில், தமிழ்நாட்டில் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித்தரப்போகிறேன் என்றதும் பலரும் கிண்டலும் கேலியும் செய்தனர், கணவர் சீனிவாஸ் மட்டும் பெரும் ஊக்கமும் உதவியும் செய்திட உருவானதுதான் தமிழ் மொழி கூடம்.

இந்த தமிழ் மொழி கூடத்தின் கோடை கால முகாமில் ஆண் பெண் என்று எந்த வயது குழந்தையும் சேரலாம்.சங்கத்தமிழ் கவிதைத்தமிழ் இலக்கண இலக்கியத்தமிழ் எல்லாம் கிடையாது பேச்சுத்தமிழ் அதுவும் சின்ன சின்ன வார்த்தைகளாக பாடல்களாக சொல்லித்தருகிறார்கள்.

வெறுமனே தமிழ் மொழி மட்டுமின்றி மறந்து போன தமிழர் விளையாட்டான தாயம்,பல்லாங்குழி,ஆடுபுலி ஆட்டம்,பாண்டி,கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளுடன் நடுவே தமிழும் சொல்லித்தரப்படுவதால் சீக்கிரமே தமிழ் கற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி விளையாட்டு நடனம் பாட்டு என்று குழந்தைகளுக்கு பிடித்தாற் போல நடந்துகொண்டு அப்படியே தமிழின் அருமையையும் ஆழத்தையும் புரியவைத்துவிடுகிறோம் பிறகு இங்கிருந்து இந்த குழந்தைகள் எங்கே போனாலும் திருக்குறளையும் ஆத்திச்சூடியையும் தேடிதேடி படிப்பார்கள்.

வெளிநாடு வாழ் குழந்தைகளுக்குதான் இந்த பிரச்னை என்று இல்லை சென்னையிலேயே இருந்தால் கூட இங்குள்ள பள்ளிகளில் தமிழே தெரியாமல் தமிழே பேசாமல் மேலே மேலே படித்துக்கொண்டு போகலாம், அப்படி படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இப்படி ஒரு கோடை கால அமைப்பு இருப்பது தெரிந்தபிறகு ஆர்வமாக இங்கே அனுப்பிவருகின்றனர்.

பாரம்பரிய உணவு பாரதப்பண்பாடு பழம்பெரும் கலாச்சாரம் இவைகளை அவர்களுக்கு பிடித்த வகையில் முழுமையாக தமிழில் சொல்லித்தருவதில் ஒரு மனநிறைவு ஏற்படுகிறது என்று சொல்லும் காயத்ரி சீனிவாஸ் நடத்தும் கோடைகால முகாம் பற்றி தெரிந்து கொள்ளவோ அல்லது அவரது இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கவோ விரும்பினால் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9884399991.

-முருகராஜ்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1256513

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *